பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தந்தை பெரியார் சிந்தனைகள்


பிராணி - மனித அவதாரமும், குப்ஜாமரம் (குட்டை மாமரம்) முதலான தாவரவடிவங்களும் அடங்கும்.

(iv) அந்தர்யாமித்துவம்: சேதநர்களின் இதய கமலத்தில் அழகே வடிவெடுத்தாற் போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய் பெரிய பிராட்டியோடு கட்டைவிரலளவாய் (அங்குஷ்ட பிரமாணமாய்) எழுந்தருளியிருக்கும் இருப்பு.

(v) அர்ச்சாவதாரம்: அடியார்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றனரோ அதையே தனக்கு வடிவமாகவும், அவர்கள் உகந்து வைத்த திருநாமத்தையே தனக்குப் பெயராகவும் கொண்டுள்ள நிலை.

இந்த நிலையில் எல்லா நிலை எம்பெருமான்களும் அர்ச்சையாக - விக்கிரகமாக - எழுந்தருளியிருப்பர். இந்நிலையில் அனைத்து எம்பெருமான்களும் தம்மைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படி அநுபவித்தற்கு இடமாக இருத்தல். அதாவது திருப்பாணாழ்வார்,

அண்டர்கோன் அணிஅரங்கன் என் அமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே.[1]

என்று அநுபவித்தவாறு அநுபவிக்கும் நிலை இது.

திருமால் வடிவம்: எம்பெருமானின் திருமேனியைப் பற்றி வேதாந்த தேசிகளின் விளக்கம்: வேதத்தின் பொருளாக உள்ளவன் எம்பெருமான். சித்தும் (உயிர்கள்), அசித்தும் (சடஉலகம்) அவன் திருமேனியில் அடங்கி உள்ளது. இதனை வைணவதத்துவம் சரீர-சரீரிபாவனை (உடல்-உயிர் உறவு) என்று பேசும். திருமங்கையாழ்வாரும்,

திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன்[2]

என்று கூறுவர்; இத்தொகுதி ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்று மேலும் இதனைத் தெளிவாக்குவர். சீவன்-இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்துவாக உள்ளான்; மூலப்பிரகிருதி (உலகம்) ஸ்ரீவத்சம் என்ற மறுவாக உள்ளான்; மகாந் என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாக உள்ளது. ஞானம் நந்தகம் என்னும் வாளாகவும்,


  1. அமலனாதிபிரான்-10
  2. பெரி. திரு. 4.3:3