பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தந்தை பெரியார் சிந்தனைகள்


களின் மனம் அந்தப் பொருளின் வடிவெடுக்கின்றது. பிறகு நாராயணனைக் காணவும், அவனை அடையவும் முடியும். இப்பொழுது அவன் யாரென்று நமக்குத் தெரியாது; ஆனால் அச்சொல் நமக்குத் தெரியும். தெரிந்ததை உறுதியாகப் பிடித்துக் கொண்டால் தெரியாததை அடையலாம். இக்கோட்பாட்டை அனைவர்க்கும் விளக்குதற்கென்றே அவன் கையில் சங்கை ஏந்திக்கொண்டுள்ளான். பிரணவம் அல்லது அவனுடைய நாம உச்சாரணத்தால் அவனை உறுதியாகப் பெற்றுவிடலாம்.

திருவாழி: சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப்பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ஒன்று அனந்தம் சக்கரங்கள் ஓயாது சுழல்கின்றன. அவையாவும் திருமாலின் திருச்சக்கரத்தில் தாங்கப்பெற்றுள்ளன. அண்டங்கள் யாவையும் உண்டு பண்ணுதலும், நிலைபெறச் செய்தலும், பின்பு அவற்றை நீக்குதலும் நாராயணனின் ‘அலகிலா விளையாட்டுச்’ செயல்கள்; நிரந்தரமான செயல்கள். சக்கரம் சுழல்வது போன்று இச்செயல்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. முடிவில்லாத விளையாட்டாக முகுந்தன் முத்தொழில்களையும் முறையாகச் செய்துவருகின்றான். இதனைத் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அபயங்கார்,

ஞாலத் திகிரி முதுநீர்த்திகிரி
நடாத்தும் அந்தக்
காலத் திகிரிமுதலான யாவும்
கடல்க டைந்த
நீலத் திகிரியனையார் அரங்கர்
நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநாளதனின்
கொண்ட கோலங்கள்.[1]

என்று பாசுரமிட்டு அற்புதமாக விளக்குவர்.

அறவாழி அந்தணன்: சக்கரத்தின் செயல்களால் ஆரா அமுதன் ஆழியங்கை அம்மான் ஆகின்றான். தர்மசக்கரம் அல்லது அறவாழி அவன் திருக்கரத்தில் திகழ்கின்றது. ஏனென்றால் அவன் அறத்தைப் பாதுகாப்பவன் அல்லவா?

  1. திருவரங்கத்துமாலை-84