பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராம வீரப்பன்

9, திருமலை சாலை,
சென்னை-600 017.
தொலைபேசி: 8266866
நாள் 10.10.2001


வாழ்த்துரை


தமிழ் மூதறிஞரும், அறிவியல் இலக்கிய ஆர்வலருமாக விளங்குகிற பெரியவர் பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்கள். “தந்தை பெரியார் சிந்தனைகள்” என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகள் நூலாக உருப்பெற்றிருக்கிறது.

இந்த நூலில் மொத்தம் 194 தலைப்புகளில் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்ச்செம்மல் கலைமாமணி டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள் அருமையான பல தமிழ் நூல்களை ஆக்கியிருக்கிறார்கள். என்றாலும் தந்தை பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வு நூல் பல வகையிலும் சிறப்புப் பெறுகிற நூலாகும்.

ஏனெனில் தமிழ் இலக்கியங்களில் அல்லது தமிழ்நாட்டில், எந்தத் தலைப்பிலும் யாரைப் பற்றியும் எழுதுவது அல்லது ஆய்வு செய்வது மிக எளிதாகும்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியாரைப் பற்றி, அவருடைய சிந்தனைகளைக் குறித்து ஆய்வு செய்வது என்பது, சர்க்கஸ்காரன் கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு காரியமாகும்.

ஏனெனில் தந்தை பெரியார் இந்த மண்ணில் பல்வேறு வகையான சிந்தனை விதைகளை விதைத்திருக்கிறார். தந்தை பெரியாருடைய குணம், கருத்துக்களை விதைத்துவிட்டுச் செல்வாரே தவிர, அது முளை விட்டதா, வளர்ந்து வருகிறதா என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர்.

ஏனெனில் விதைப்பதுதான் அவருடைய நோக்கமே தவிர, அது விளைந்து பலன் தருகிறதா என்று பார்த்து, அந்தப் பலனை அனுபவிப்பதற்காகக் காத்திருப்பது அவருடைய நோக்கம் அல்ல; அவருடைய பழக்கமும் அல்ல.

அவர் விதைத்த விதைகள் முளையிட்டு, செடியாகி வளர்ந்து மரமாகி சிலவற்றில் பலன் தந்து கொண்டிருக்கிறது என்றால், அவரைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா போன்ற தலைசிறந்த தொண்டர்கள் தந்தை பெரியாருக்குக் கிடைத்த பலன்தான்.

v