பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரண்டாவது பொழிவு
நாள்: 27.02.2001 முற்பகல்


2. சமூகம் பற்றிய சிந்தனைகள்


அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,
அறிஞர்பெருமக்களே,
மாணாக்கச்செல்வங்களே.

இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் சமூகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன்.

மனிதன் என்ற சீவப்பிராணியும் அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும் இருந்த பொருள்களிலிருந்தே படிப்படி யாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு,

புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்....[1]

என்று மணிவாசகப்பெருமானின் மணியான பாடல்பகுதியை நினைக்கலாம். இது மனிதனைப் பற்றிய ஒருவிதமான விளக்கம்; படிவளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) அடிப்படை யாகக் கொண்டது.

மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான்; பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலியவை போல் மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் குருதியை உறிஞ்சியும் வாழும் சீவப்பிராணிகளேயாகும் என்பது தந்தை பெரியாராவர்களின் கருத்தாகும். “உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே"[2] என்பது தொல்காப்பியம். மனிதவடிவமாக இருப்பவர்கள் அனைவரும்


  1. திருவா. சிவபுராணம் -அடி 28-31.
  2. தொல். சொல். கிளவியாக்கம்-1.