பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தந்தை பெரியார் சிந்தனைகள்


"நான் ஒரு நாத்திகன் அல்லன். தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியும் அல்லன்; தேசாபிமானியும் அல்லன்; ஆனால் தீவிர சீவாதார எண்ணமுடையவன். எனக்குச் சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்பெறும் உயர்வு தாழ்வுகளோ இல்லை. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன்; ஆதரிப்பவன் அல்லன்.

தமிழ்நாட்டில் சாதி சமயச் சண்டைக்கு காரணமாய் நிற்கும் எவ்வியக்கத்தையும் ஒழிக்கவேண்டும் என்று விரதம் பூண்டிருப்பவன். சுத்தமானவனா அசுத்தமானவனா என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக்காரணமாகத் தொடக்கூடாது என்பதே வர்ணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாம் என்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாம் என்பதும் எனது கொள்கை.

ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மைதான். யாக்கை நிலையாமையை வள்ளுவப் பெருந்தகையும் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

‘'நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்'’
‘'பெருமை உடைத்திவ் வுலகு (336)'’

என்பது வள்ளுவம். “இஃது உண்மைதான் என்றாலும் அவனோடு அவன் முயற்சியும்- அவன் தொடங்கிய செயலும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பிவிட்டால்-அந்த எண்ணம் ஒருபோதும் அழியாது; அடக்கி விடவும் முடியாது” என்று கூறுவார் பெரியார். “என்னுடைய முயற்சி எல்லாம் மக்கள் எதையும் சிந்திக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது என்பது தான். இது போதுமான அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது” என்கின்றார்.

இராமகிருஷ்ணபரமஹம்சரின் கொள்கைகளை விவேகாநந்தர் பரப்பி வந்தார். அவர்கட்குப்பின் நாடு முழுதும் நிறுவப் பெற்றுள்ள இராமகிருஷ்ண மடங்கள் பொறுப்பேற்றுப் பரப்பி வருகின்றன. இராமலிங்க அடிகளின் கருத்துகளை பொள்ளாச்சி வள்ளல் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள் பரப்பி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் இப்பணி நடைபெற்று வருகின்றது. இங்ஙனமே மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்கள். இன்று பெரியாரைப் பார்க்காதவர்கள்கூட அவர் பெயரைக் கேட்டிராத