பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தந்தை பெரியார் சிந்தனைகள்



(5) உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சமநிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு மற்றொருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

(6) திடீரென்று காதல் கொள்வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது, என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக்காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால்-காதலும் பொய், கடவுளும் பொய் என்றுதான் பொருள்; அர்த்தம்.

(7) ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்டபிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும்? திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்கவழக்கம் ஆகியவற்றை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-விருப்பம் (இறையனார் களவியல் கருத்தை ஒட்டியுள்ளது).

(8) காதல் மணத்தைவிட வாழ்க்கை ஒப்பந்த மணமே வாழ்க்கைக்கு மேலானதாக இருந்துவரக் கூடும் என்பது எனது கருத்து.

(9) திருமணம் அல்லது கல்யாணம், கன்னிகாதானம் ஆகியவை போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்மக்களாகிய நம்மவர்க்குக் கிடையாது. நம்மவர்க்கெல்லாம் மணவாழ்க்கை இல்லை; காதல் வாழ்க்கைதான் இருந்தது.

(ஆ) கலப்பு மணம்: இது பற்றியும் அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(1) கலப்பு மணம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எல்லா மக்களாலும் எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டும், வேதபுராண காலங்களில் இருந்தும், சுருதி, சுமிருதி ஆகியவற்றால் அனுமதிக்கப் பெற்றும் நடந்து வருகின்ற முறையே ஒழிய சுயமரியாதைக்