பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமூகம்பற்றிய சிந்தனைகள்

73



வாயடைத்துப் போனார்கள். “கணவனுக்கேற்ற மனைவி; நாம் என்ன சொல்வது?” என்று சொல்லிக்கொண்டே நழுவி விட்டனர். இந்த நிகழ்ச்சியை,

தாலி என்னும் சங்கிலிதான், பெண்ணினத்தைப்
பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன்மனைவி
மறுத்துரைக்க, ‘நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன?
எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்.
‘தாலிஎங்கே?’ எனக்கேலி செய்த பெண்கள்
தமைக்கண்டு சினந்தார் அம்மை!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.

என்ற பாட்டாக வடித்துக் காட்டுவார் கவிஞர் நாச்சியப்பன்.

மூடநம்பிக்கை: திருமணம் பற்றிய சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவைபற்றிய பெரியாரின் சிந்தனைகள்.

(i) சாத்திரப்படி பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப் பெறவேண்டியவள் என்பது. இஃது ஒருபுறம் இருக்க மனிதன் ‘புத்’ என்னும் நரகத்திற்குப் போகாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கட்கு இறுதிக்கடன், திதி முதலியவை செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் என்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறது.

(ii) பொருத்தம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்பது மிக மிக முட்டாள்தனம். பொருத்தம் பார்க்கும் சோதிடனுக்கு ஆணையோ பெண்ணையோ தெரியாது. இருந்தாலும் பொருத்தம் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்களின் சாதகத்தையோ இரண்டு பெண்களின் சாதகத்தையோ கொடுத்தால் இவை பொருத்த மற்றவை என்று எவனாவது கூறமுடியுமா?

(iii) தாரைவார்த்து வாங்கினவன் வாங்கின பெண்ணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். வாடகைக்கு விடலாம். அடகுவைக்கலாம். அவனுக்கு உரிமை உள்ளது. ஏன் என்று கேட்க முடியாது. இங்ஙனம் புராண இதிகாசங்களில் நடந்துள்ளது. தருமன் திரெளபதியை பணயம் வைத்துச் சூதாடினான். அரிச்சந்திரன் தன்மனைவியை வேறு ஒருவனிடம் விற்றான். இயற்பகை நாயனார் தன் மனைவியை சிவனடியார் ஒருவருக்கு கூட்டிக் கொடுத்தார். அவமானம் உள்ள கதைகள்!

(iv) இன்றைக்குப் பொருத்தம் சோதிடனைக் கொண்டுதான் பார்க்கப்பெறுகின்றதே ஒழிய வயதுப் பொருத்தம், உடற்கட்டு,