பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

15



அம்மானை

மூன்று பெண்மணிகள் கூடி ஒருவகையான காய்களை மேலேபோட்டுப் பிடித்துக்கொண்டும், தொடை தடை விடைகளுடன் ஒருவர்க்கொருவர் உரையாடிக்கொள்ளும் முறையில் இன்னிசையுடன் பாடிக்கொண்டும் விளையாடுகின்ற ஒரு வகையான ஆட்டத்திற்கு அம்மானை என்று பெயர். இந்நிலையை அமைத்துப் பாடுகின்ற பாட்டிற்கு அம்மானைப் பாட்டு என்று பெயர். இப்பாட்டு (பெரும்பான்மையும்) ஐந்து அடிகளை உடையதாய் ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பெறும்.

தொடை : ஒரு பெண் ஒரு செய்தியை (தொடுத்து) அறிவிப்பதாக முதல் இரண்டடிகளும் இருக்கும்.
தடை : முதற்பெண் அறிவித்ததற்கு, இரண்டாவது பெண் (தடுத்து) குறுக்குக் கேள்வி போடுவதாக மூன்றாவது நான்காவது அடிகள் இருக்கும்.
விடை : அவ்விரு பெண்களின் தொடை, தடைகட்கேற்ப ஒரு நல்ல முடிவோ, தீர்ப்போ மூன்றாவது பெண் (விடுப்பதாக) கூறுவதாகக் கடைசி அடி இருக்கும்.

எனவே, மூன்று பெண்மணிகள் தொடை, தடை, விடைகளுடன், ஒருவர்க்கொருவர் உரையாடிக் கொள்வதாக அமையப் பெறும் சிறப்பால் அம்மானைப் பாடல்கள் அழகாயிருப்பதும், படிப்பதற்கு இனிமை தருவதும் வழக்கம். மூவர் பேச்சின் முடிவிலும் அம்மானை எனும் சொல் அழகுடன் மிளிரும். இம்முறையாக, மூன்று பெண்மணிகள் கூடி முடிவுகட்டித் தனித்தமிழ்க்கிளர்ச்சி செய்வதாக இந்நூல் அமைக்கப் பெற்றுளது.