பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

33


அன்று (தமிழ்ச் சங்கம்)

இளமைப் பொலிவுடைய இன்தமிழ் அக்காலம்
வளமதுரைச் சங்கத்தில் வளர்ந்ததுகாண் அம்மானை
வளமதுரைச் சங்கத்தில் வளர்ந்ததா மாகில்
வளர்த்தநல் தாயரைநீ வகுத்துரைப்பாய் அம்மானை
புலவரும் வேந்தருமே புகழ்தாயர் அம்மானை (64)

இன்று

முற்காலத் தமிழாட்சி முற்றும் உணர்ந்துவரும்
தற்காலத் தமிழிளைஞர் தமிழ்வெறியர் அம்மானை
தற்காலத் தமிழிளைஞர் தமிழ்வெறிய ராமாயின்
பிற்காலம் தமிழ்த்தாயே பேரரசி யம்மானை
பேரரசி யோடவளே பெருந்தெய்வம் அம்மானை (65)

தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்பு
தமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானை
தமிழ்தமிழசெந் தமிழென்று தவித்தவரைக் கொடியசில
தமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானை
வெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை (66)

உரிமை

இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்
தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானை
தனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ள
இனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானை
எதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை(67)


65 - தற்காலத் தமிழிளைஞர்கள் தமிழ்ப்பித்தராகத் திகழ்வதால், இனி தமிழ்த்தாயே தமிழ்நாட்டிற்கு அரசியும், தெய்வமும் ஆவாள்.
66 - முன்பு, தமிழுணர்ச்சி ததும்பியவரை வெறுத்தவர்களெல்லோரும் இன்று தமிழை விரும்புகின்றனர்.
67 - இணைந்த இந்தியாவை எதிர்த்து மாறுபடாமலேயே தமிழரின் தனியுரிமையரசைக் கேட்டு வாங்கிக் கொள்ளவேண்டும்.