பக்கம்:தன்னுணர்வு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை


உடல் வளர்ச்சிக்கு உணவு எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே உள்ளத்தின் வளர்ச்சிக்கு உணர்வு இன்றியமையாதது. உணரப்பெறும் அறிவுக்குத் தேவையானது உணர்வு. நமக்கிருக்கும் அறிவுப்பொறிகள், நல்ல உணர்வோடிருந்து செயற்பட்டால்தான், அவற்றின் வழி, அறிவை நாம் பெற முடியும். அவற்றை உணர்வோடிருக்கும்படி செய்ய, அப் பொறிகள் பழுதுறாவண்ணம் காப்பது நம் கடமை. அப் பொறிகள் பழுதுறாமல் இருப்பினும், அவற்றை மன உணர்வால் திறனுடையதாகச் செய்து, அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்தினால்தான், நாம் முழு அறிவு பெற முடியும். எனவே நம் அறிவுக்கருவிகளாகிய கண், மூக்கு, செவி, வாய், மெய் ஆகிய ஐம்பொறிகளையும், பழுதுறாமல் காத்து, அவற்றின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி அவற்றின் வழியாக அறிவு பெறுவதற்கு மனத்தைச் செம்மையாகவும் உணர்வுடையதாகவும் நாம் வைத்திருத்தல் வேண்டும்

'மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி'
(453)
'மனந்தூயார்க் கெச்சம் நன்றாகும்'
(456)
'மனநலம் மன்னுயிர்க் காக்கம்'
(457)
-- என்பவை திருவள்ளுவர் வாய்மை மொழிகள்

மனமே எல்லா நன்மை தீமைகளுக்கும் காரணமானது; மூலமானது. மனம் நல்லுணர்வைப் பெற்றிருப்பின், நம் சொல், செயல், அறிவு ஆகிய அனைத்தும் நல்லபடியாய் இருக்கும். அது தீயவுணர்வைப் பெறின், அதன் தொடர்புடைய அனைத்தும் தீமையாகவே முடியும். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்' என்றார் அறநூலாசிரியரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/5&oldid=1161900" இலிருந்து மீள்விக்கப்பட்டது