பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழகக் குறுநில வேந்தர்

இவற்றாற் சேது நாடு செம்பி நாடு என வழங்குதலும், இந்நாட்டிற்கு மற்றை நாட்டினும் மேம்பட்டுள்ள தெய்வீகச்சிறப்பும் தெளியலாகும். சீராமமூர்த்தி திருவணை கட்டும்போது இந்நாட்டுச் சிறுவிலங்கும் இயன்ற உதவிசெய்து அவன் திருக்கரத்தால் வருடப்பெற்றுய்ந்தன வென்பது தொன்றுதொட்டுக் கேட்கப்படுவதாம். தொண்டரடிப்பொடியாரும், “குரங்குகண் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடித்-தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா வணிலம் போலேன்” என இதனைச் சிறப்பித்தல் காண்க.

இப்போதும், சேது நாட்டினைச் சேர்ந்ததாகவுள்ள ‘மணக்குடி’ என்ற ஊரையுடைய இடையள நாட்டை,

“வளவர் காக்கும் வளநாட் டுள்ளு
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்
கெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூ ருள்ளு

மூரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடி”

என நெடுந்தொகைக் கருத்துரைப்பாயிரத்துக் கூறியதனானும். சேது நாட்டுத் தொண்டிப்பட்டினத்தையுடைய ராகவைத்துச் சிலப்பதிகார வூர்காண்காதைக்கண் “வங்க வீட்டத்துத் தொண்டியோ” ரென்று சோழரைக் கூறியதனானும் பாண்டியராட்சிக்குள்ளாய இச்சேது நாட்டுப் பெரும்பகுதி சோழராட்சிக்குள்ளாயசெய்தி துணியப்படும்.

இச்சேது நாடாண்ட மறவர் தலைவரெல்லாம், இவ்விரு வேந்தர்க்கும் போர்த்துணையாய் நின்ற காரணம்பற்றியே பாண்டியமண்டலஸ்தாபனா சாரியன், சோளமண்டலப்ரதிஷ்டாபகன் என்னும் விருதாவளி சூடினராவர். இவ்விருதா வளி இவருடைய பழையசாசனங்களிலெல்லாங் காணலாம்.


தஞ்சைச் சரசுவதி நிலயத்துத் திருப்புல்லாணி விஷயமாகக் காணப்பட்ட பலவற்றுள் இஃதொன்று