பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழகக் குறுநில வேந்தர்


விஜயாலயன் பேரனாகிய வீரகாராயண சோழன் என்பவன் வீரவென்றிபற்றிச் சங்கிராமராகவன் எனப் பட்டம் புனைந்தமையும்[1] பழைய சோழர்சாசனங்களிற் கண்டுகொள்க. குலோத்துங்க சேதுபதியின் புத்திரராகிய சமரகோலாகல சேதுபதி என்பவர், சோழரிடம் மன்னார் குடாக்கடலில் முத்துக்குளிக்கு முரிமையைத் தமது வீரத்துக்குப் பரிசாகப் பெற்றனராதலால் அன்றுமுதல் இவர் தமது கடல்வளமுடைமையை மேம்படுத்தித் தம் சிறப்புப் பெயர்கட்குமுன் 'முத்து’ என்னும் பதத்தினையும் இணைத்து வழங்கினராவர்.

முத்துவிஜயரகுநாதன் என்பது இவர்க்குச் சிறந்த பெயராம். இவரது சாசனங்களிற் 'சொரிமுத்து வன்னியன் என ஓர் விருதாவளி காணப்படுவதும் இவரது கடற்படுமுத்தின் பெருக்கத்தினையே குறிப்பதாகும். 'வணங்காத தெவ்வைப் பெருமால் சொரிமுத்து வன்னியன் பொன்னணங்காருமார்பன் ரகுநாதன்” என ஒருதுறைக் கோவையினும் வருதல் காண்க. வன்னியர் என்பதும் அரசர்படைத்தலைவர்க் கொருபெயர்,

'கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கட்டுத்
திக்குப்பட ராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்'

என வரும் கல்லாடத்தானும் அறிந்துகொள்க. இனி இவர் சிறப்பித்துத் தாங்கும் படைக்கலம் வளரி எனப் பெயர் பெறுவது. இதனை ஆளுதலிலிவர் மிகக்கை தேர்ந்த


  1. * Lists of Antiquities, Madras, Sewell, Vol. 11, Page 257.