பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறிமுகம்


என் அருமைத் தந்தையின் தந்தை மகாவித்துவான் ரா.இராகவய்யங்கார் அவர்களின் படைப்புக்களைச் சிறு சிறுநூல்களாக வெளியிடுகிறோம். இத்தொகுதியில் “தமிழகக் குறுநில வேந்தர்” என்ற தலைப்பில் சில கட்டுரைகள் வெளிவருகின்றன. மகாவித்துவான் தம் சிறந்த தென்மொழி, வடமொழித் தேர்ச்சியால் யாவரும் காணாத புதிய உண்மைகளை வேளிர், கோசர், பல்லவர் வரலாற்றின் மூலம் வெளியிட்டுள்ளார். நாம் இவற்றை அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை. நமக்கென சுதந்திரமான பாதையை வகுத்துக் கொள்வதில் இவருக்குள்ள ஆர்வத்தை நாம் போற்ற வேண்டும். வேளிரும்,கோசரும் மிகத்தொன்மையான தமிழ்க் குடிகள். காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள். இதுபோலவே பல்லவர் தம்மைத் துரோணர் வழி வந்தவர் எனக் கூறிக் கொண்டனர். துரோணர்க்கும், க்ருதாசி என்ற நீரர மகட்கும் பிறந்தவன் அசுவத்தாமன் என்றும், அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அர மகட்கும் தோன்றியவன் பல்லவன் என்றும், போத்து என்பது பல்லவர்க்குரிய இடபக் கொடியைக் குறிக்கும் என்றும், தொண்டை என்பது குடிப்பெயர் என்றும், தொண்டையன் பழமையான பெயர் என்றும், பல்லவ குலம், கடல்கெழு செல்வி வழியாக வந்த துரோணன் மரபென்றும் தக்க ஆதாரங்கள் காட்டி விளக்கியுள்ளார். சேது நாட்டின் தொன்மையையும், சேதுபதிகள் தமிழ் வளர்த்த பெருமையையும் இரு கட்டுரைகள் விளக்குகின்றன.

இதை வெளியிடப் பொருளுதவிய இந்தியன் வங்கி நிறுவனத்தார்க்கு என் நன்றி. பாங்குடன் வெளியிட்ட பாரதி பதிப்பகத்தார் என் பாராட்டுக்குரியவர். தமிழன்பர்கள் இந்நூலை ஆதரித்து என்னை ஊக்குவிப்பர் என நம்புகிறேன்.

பம்பாய்

ரா.விஜயராகவன்

ஏப்ரல் 1994

(சிறப்புப் பேராசிரியர்)

த கு வே-1