பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர் நிழல் சூழ்ந்த இவ்விடத்தில் நுழைந்ததும், என் முதுமையுள்ளத்தில் கூடப் புத்துணர்ச்சி பிறக்கிறது. என் உள்ளத்தை இதன் அழகில் பறிகொடுத்து விட்டுத் தேடுகிறேன். அமைதி, புதுமை ஆகிய இரண்டையும் நான் இங்கு காண்கிறேன். இன்பத்தை நாடும் இளங் காதலர் கையொடு கையிணைத்துக் கொண்டு, கனிந்து குலுங்கும் பழங்களைச் சுவைத்துக்கொண்டு, மணங் கமழும் மலர்களைப் பறித்து நுகர்ந்துகொண்டு மென்னடை போட்டு மெதுவாக உலவுவதற்கு இவ்விடம் மிகவும் ஏற்றது“ என்று கூறி மகிழ்கிறார்.

கோதகிரி (Kotagiri)யிலிருந்து கதாதகல்லா (Gathada Halla) என்ற ஓராறு தெற்கு நோக்கி ஓடி வருகிறது. அது 250 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து செயிண்ட் காதரைன் நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. செயிண்ட் காதரைன் என்ற அம்மையார் திருவாளர் எம். டி. காக்பர்ன் என்ற வெள்ளையரின் மனைவி. இவ்வம்மையாரும், இவர் கணவரும் முதன் முதலாகக் கோதகிரியில் குடி புகுந்த வெள்ளையரில் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்விருவரின் சமாதிகள் கோதகிரியிலேயே உள்ளன. இவ்வம்மையாரின் பெயர் இந்நீர் வீழ்ச்சிக்கு இடப்பட்டது. கூனூருக்கு அருகிலுள்ள டாஃபின் மூக்கி (Dolphin's nose)லிருந்து காண்போர்க்குக் காதரைன் நீர்வீழ்ச்சி கண்கொள்ளாப் பேரழகோடு காட்சி தரும்.

கூனூர் மலைக்கருகிலுள்ள படுகையில் தோன்றி, கூனூர், வெல்லிங்டன் ஆகிய இடங்களின் வழியாக ஓடி வருகிறது. கூனூர் ஆறு. இவ்வாறு 'காட்டேரி நீர்வீழ்ச்சி'யை ஏற்படுத்துகிறது. இந் நீர் வீழ்ச்சியிலிருந்து எடுக்கப்படும் மின்னாற்றல் அரவங் காட்டிலுள்ள படைக்கலத் தொழிற்சாலை (Cordite factory)யை இயக்குகிறது. இந் நீர்வீழ்ச்சியின்