பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

களும், சிற்றாறுகளும் சுழித்து ஓடிய வண்ணமிருக்கும். தினையை விதைத்துவிட்டால் தானாக விளையும். அருவி நீரின் வளத்தால் மலைநெல் விளைகிறது. மூங்கிலரிசியும் குறிஞ்சிவாழ் மக்களுக்கு உணவாக அமைகிறது. தேனும் இவர்களுக்குச் சிறந்த உணவாகும். தினை மாவைத் தேனில் பிசைந்து கானவர் விருப்போடு உண்பர். காடுகளில் உள்ள தேன்கூட்டை அழித்துத் தேனெடுப்பது இவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கு. கானவர் தேனெடுப்பதில் பெரு விருப்புடையவர் என்பதைக் குறிஞ்சிக் கலி இலக்கிய நயத்தோடு கூறிச் செல்லுகிறது.

மலைநாட்டுத் தலைவன் ஒருவன், காதலியைக் காணவராமல் காலந்தாழ்த்துகிறான். அவன் பிரிவைப் பொறுத்தல் ஆற்றாத காதலி, மிகவும் உள்ளம் நைந்து வாடுகிறாள். அவள் துன்பத்தைக் கண்ட தோழி, “அன்புடைத் தோழி! உன் காதலன் உயர்குடியில் பிறந்தவன். அவன் மலைநாடு வளப்பம் மிக்கது. அவன் நாட்டில், தினைக் கொல்லையில் அமைத்த பரண்மீது அமர்ந்து காவல் புரியும் கனி மொழிப்பாவையர், தம் கூந்தலின் ஈரத்தை உலர்த்திக் கொள்வதற்காகப் புகைக்கும் அகிற்புகை, வானில் சென்று பரவுகிறது. அப்புகையுள் புதையுண்ட விண்மதி ஒளி மறைத்து மலையுச்சியை அடைகிறது. அம்மலையின் அடுக்கத்தில் தேன் கூடுகள் மலிந்து காணப்படுகின்றன. தேன் கூடுகளையே கண்டு பழகிய கானவர் கண்கள், புகையுண்ட முழுமதியை மலையுச்சியில் கண்டதும், அதையும் ஒரு தேன் கூடு என்று கருதுகின்றனர். அக்கூட்டை அடைவதற்காக மலையுச்சியில் ஏணியைச் சார்த்தி ஏறுகின்றனர். அத்தகைய செழிப்புமிக்க மலைநாட்டுத் தலைவன் உன்னைக் காணக் கட்டாயம் வருவான்” என்று கூறித்தேற்றுகிறாள்.