பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177

டும், வேட்டையாடியும், ஆடல் நிகழ்த்தியும், குதிரைப் பந்தயத்தில் பங்கு கொண்டும், குழிப்பந்து மட்டைப் பந்தாட்டப் போட்டிகளைக் கண்டு கழித்தும், மீன் பிடித்தும், மலைகளில் சுற்றித் திரிந்தும், ஏரியில் தோணியூர்ந்தும், பசும்புற்றரையில் படுத்துப் புரண்டும், பழங்குடி மக்களைக் கண்டு களித்தும், குறிஞ்சியழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தும் பொழுதை இன்பமாகக் கழிக்கின்றனர். உதகமண்டலத்தின் தட்ப வெப்பநிலை இளைஞர், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகிய எல்லாருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இந்நகரில் கார் காலம் என்று தனியாக ஒரு காலம் கிடையாது. ஆண்டு முழுவதும் சிறு தூறல்களாக மழை தூறிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு 30 முதல் 40 அங்குலம் வரை மழை பெய்கிறது. இந்நகரின் வெப்பம் 60°-க்கு மேல் உயர்வதுமில்லை. 50°-க்குக் கீழ்க் குறைவதும் இல்லை .

சிகரங்கள் :

முதலிலேயே சிகரங்களைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டேன். அவைகளில் முக்கியமானவற்றையும் அழகியவற்றையும் பற்றிச் சிறிது குறிப்பிடுவோம். உதகமண்டலத்தைச் சுற்றித் தொட்டபெட்டா, எல்க், பனிவீழ்சிகரம், ஃபெர்ன், கெய்ரன் என்ற அழகிய சிகரங்கள் வானளாவி நிற்கின்றன. தொட்டபெட்டா :

தொட்டபெட்டா என்றால் பெருமலை என்பது பொருள். இதனுடைய உயரம் 8,640 அடி, நீலகிரிப் பீடபூமியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் இது தான், இச்சிகரத்தை எளிதில் அடையலாம். மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை உந்துவண்டியில் கடந்துவிடலாம். மீதிப்பகுதியை நடந்தே ஏறிச் செல்ல

கு.வ.-12