பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199

இங்கு அமர்ந்து எழுதிய முடங்கல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடம் அழகிய ஒரு காட்டின் நடுவில் அமைந்துள்ளது. இவ்விடத்திலிருந்து காண்போருக்குக் கூனூரின் முழுத் தோற்றமும், பல தேயிலைத் தோட்டங்களும், அழகோடு காட்சியளிக்கும். அவற்றோடு மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் பழைய கோட்டை ஒன்றும் தென்படும். பகைவரிடமிருந்து கைப்பற்றிய கைதிகளை அவ்விடத்திலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிடுவார்களாம். மேட்டுப்பாளையமும், அவ்வூரிலிருந்து மலையின்மேல் வளைந்து வளைந்து ஏறிவரும் புகைவண்டிப் பாதையும், உந்துவண்டிப் பாதையும் நன்றாகத் தெரியும். கூனூரிலிருந்து இவ் விருக்கைக்குச் செல்லும் வழியில். லேம்ப்ஸ் பாறை (Lamb's Rock) என்ற ஓர் அழகிய இடமும் உண்டு.

சிம் பூங்கா :

கூனூர் நகரின் நடுவில் அமைந்துள்ள சிம் பூங்கா (Sim's Park) மிகவும் அழகானது. உதகமண்டலத்திலுள்ள அரசியலார் பயிர்த் தோட்டத்தைவிட இது அளவில் சிறியதென்றாலும் உள்ளத்தைக் கவரும் தன்மையது. மலைச்சரிவில் இது அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள மரங்கள் இங்குப் பயிரிடப்பட்டுள்ளன. அடுக்கடுக்கான திட்டுகளில் வரிசை வரிசையாகப் பெருமரங்களும், பல வண்ண மலர்ச் செடிகளும் உள்ளன. சிறிய ஓடைகள் நாற்புறமும் ஓடிவந்து பூங்காவின் நடுவிலுள்ள குளத்தில் விழுகின்றன. அக்குளத்தின்மீது பல அழகிய சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்கா திருவாளர் ஜெ. டி. சிம் சி. எஸ். ஐ. (I. D. Sim C. S. I) என்பவரால் நிறுவப்பட்டது. ஆகையினாலேயே இப்பூங்கா இவர் பெயர் கொண்டு விளங்குகிறது. இவர் சென்னை மேல் சபையின் உறுப்பினராக (Member of the Legislative Council) 1870 முதல் 1875 வரை பணியாற்றி