பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

5. பழனி மலைகள்

பெயர்க் காரணம் :

பழனிமலை என்று குறிப்பிடும்போது, முருகன் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கருமலையே எல்லோருடைய உள்ளத்திலும் தோன்றும். ஆனால் இங்குக் குறிப்பிடப்படும் பழனி மலைகள், பழனி நகருக்குத் தெற்கிலுள்ள மலைக் கூட்டமே ஆகும். வட மொழியில் இவற்றை 'வராக கிரி' என்பர். தமிழில் இதைப் பன்றி மலை என்று குறிப்பிடுவர். இம் மலைக்கு இப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாக ஒரு கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது. இம் மலைமீது ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தாராம், அவ் வழி வந்த பன்னிரண்டு குறும்புக்கார இளைஞர்கள் அம் முனிவரை இகழ்ந்து பேசினார்களாம். இதனால் சினங்கொண்ட அம் முனிவர் அப் பன்னிருவரையும் பன்றிகளாகப் போகும்படி சபித்தாராம். அவர்களும் பன்றிகளாக மாறி அம் மலைமீது சுற்றித் திரிந்தார்கள் . அவர்கள் பால் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவர்களுடைய பன்றியுருவை மாற்றி, பாண்டிய மன்னன் அவைக்களத்தில் அமைச்சர்களாக அமர்த்தினாராம். இக் காரணம் பற்றியே இம் மலை பண்டை நாட்களில் பன்றி மலை என்று பெருவழக்காக அழைக்கப்பட்டு வந்தது என்பர். பன்றி மலையின் திரிபே பழனி மலை என்றும் சிலர் கூறுகின்றனர். புகழ் மிக்க பழனி நகருக்கு அருகில் இருப்பதனால், இம் மலை பழனி மலை என்று பெயர் பெற்றதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

அமைப்பு:

இது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவாகும். இம் மலைக்குத் தென் மேற்கே ஏலக்காய் மலை (Carda-