பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

227

னும் வழியானது மேற்பழனி மலையையும் கீழ்ப்பழனி மலையையும் பிரிக்கும் இயற்கை எல்லையான நியூட்ரல் சேடல் (Neutral Saddle) என்ற இடத்தையடைகிறது. இவ்விடம் பெருமாள் சிகரத்தின் அடிவாரத்திலுள்ளது. தெற்கில் செல்லும் பாதை குதிரைப் பாதையாகும். இது செங்குத்தாக அமைந்துள்ளது. 12 கல் நீளமுள்ள இப்பாதை, செண்பகனூர் அடிவாரத்திலுள்ள கிஷ்ட்னமா நாயக்கர் தோப்பு (Kistnama Nayak's Tope) வழியாகச் சமவெளியை அடைகிறது. கிஷ்ட்னமா நாயக்கர் தோப்பு, (பொதுவாகத் தோப்பு என்றே அழைக்கப் பெறும்) மதுரையில் நாயக்க மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றிய ஒருவருடைய உறவினர் பெயரால் அமைக்கப்பட்டது. மதுரையில் நாயக்கர் ஆட்சி அழிவுற்றதும், அப்பரம்பரையினர் பெரிய குளத்திற்கு ஓடிவந்து தங்கினர். அவர்கள் பரம்பரையினரே தொடர்ந்து கி. பி. 1870-ஆம் ஆண்டுவரை, வடகரை என்னும் ஊருக்குக் கிராமத் தலைவர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இத் தோப்பிலிருந்து பெரியகுளம் 5 கல் தொலைவில் அமைந்துள்ளது. பெரிய குளத்திலிருந்து அம்மைய நாயக்கனூர் புகை வண்டி நிலையம் 28 கல் தொலைவிலுள்ளது. பண்டைக்காலத்தில் கோடைக் கானலை அடைய விரும்புவோர் அம்மைய நாயக்கனூரிலிருந்து தோப்பிற்குச் செல்லும் 33 கல் தொலைவை மாட்டு வண்டியிலேயே கடந்து செல்ல வேண்டி யிருந்தது. தோப்பிலிருந்து புறப்பட்டுக் குதிரையில் ஏறியோ, நடந்தோ, செண்பகனூர் வழியாக மலையுச்சியை யடைய வேண்டும். நடந்து செல்ல முடியாதவர்களை, பழனிமலைப் புலையர்கள் திறந்த பல்லக்குப் (Canvas Chair) போன்ற இருக்கையில் அமர்த்தித் தூக்கிச் செல்வர். செல்லும்போது அவர்கள் தங்கள் மொழியில் உரக்கப் பாடிக்கொண்டே. வழி நடைப் பயணத்தை மறந்து செல்வர்.