பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

விலுள்ள தலைமைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்வியில் பங்குகொண்டுள்ள மாதர்கள் ஆண்டுக்கொரு தடவை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கூடுகின்றனர். இக்கழகம் இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பட்டதாரிப் பெண்டிரால் முதலில் துவக்கப்பட்டது. முதலில் சமுதாய நலன்பற்றி ஆராயும் கழகமாக இது துவங்கியது. பிறகு இந்தியாவில் வாழும் எல்லா இனப்பட்டதாரிப் பெண்களும் இதில் பங்கு கொண்டனர். இந்திய நாட்டுப் பெண்கள், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு வேண்டிய நல்வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து நன்முறையில் இக்கழகம் பணிபுரிகிறது.

மேலும் இங்குப் 'பழனிமலைகள் வேட்டைக் கழகம்' என்ற ஓர் அமைப்பும் உள்ளது, இதன் கௌரவச் செயலாளராகப் பழனிமலை காட்டிலாகா அதிகாரி பணிபுரிகிறார். பழனிமலைக் காடுகளில் வேட்டையாட விரும்புபவர்களுக்கு, இது சில சட்டதிட்டங்களை வகுத்து அமுல் நடத்தி வருகிறது. கி. பி. 1937-ஆம் ஆண்டு கோனலூரில் ஆற்று மீன்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை இது அமைத்தது. ஹேமில்டன் கோட்டையையும் பூம்பாறையையும் இணைக்கும் பாதைக்குச் சற்று மேற்புறத்தில் செம்படவர் வாழ்வதற்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவஞ்சிக்கும், 'வந்தரவு'க்கும் இடையிலுள்ள தலைவாரி ஆற்றிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது கோடைக்கானலில் இருந்த இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சிறந்த முறையில் பணியாற்றியது. போரில் காயம்பட்டவர்களின் மருத்துவத்திற்கு மிகவும் இன்றியமையாத பல பொருள்களை உற்பத்தி செய்து வழங்கியது.