பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/284

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

கி. பி. 1795 முதல் 1800 வரையில் ஜாதிக்காய், இலவங்கம் முதலியவற்றைப் பயிரிட்டு இங்குச் சோதனை நிகழ்த்தினார்கள். 'மலாக்கா' நாட்டுப் பயிர்கள் எல்லாம் இங்குக் கொணரப்பட்டுப் பயிரிடப்பட்டன. கி. பி. 1800 முதல் 1806 வரை கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வணிகத் துறைத் தலைவராகத் திருவாளர் காசாமேஜர் (Mr. Casamajor) என்பவர் பணியாற்றி வந்தார் (காசிமேசிபுரம் என்ற சிற்றூர் இவர் பெயராலேயே ஏற்பட்டது.) இவருடைய பெருமுயற்சியால் குற்றாலமலைச் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பல தோட்டங்கள் நிறுவப்பட்டன, இலவங்கப் பட்டை பயிரிடும் தோட்டமொன்று, கொக்கரக் குளத்தில் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நடுவர் தங்கியிருந்த பங்களாத் தோட்டத்திற்கு அடுத்தாற்போல் இத் தோட்டம் அமைந்திருந்தது. கி. பி. 1813-ஆம் ஆண்டு குற்றால மலையில் விளைந்த ஜாதிக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை ஆகியவை ஐரோப்பிய நாட்டு விற்பனைக்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், அவை உயர்ந்த தரத்தைச் சார்ந்தவையல்ல என்று ஆங்கில்வணிகர்கள் கூறினர். இப்பயிர்த் தொழில் இங்கு நல்ல வருவாய் அளிக்காததால் கம்பெனி வணிகத் துறையார் இத்தோட்டங்களை நிலவரித் துறை (Reveriue department) யிடம் ஒப்படைத்துவிட்டனர். ஆரம்பத்திலிருந்தே இலவங்கப்பட்டை இங்கு நன்றாக விளையாததால், திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் இருந்த இலவங்கப்பட்டைத் தோட்டங்கள் மட்டும் அரசியலாரின் சோதனைக் களங்களாகப் பயன்படுத்தப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து, குற்றால மலையில் விளைந்த பொருள்கள் மீண்டும் விற்பனைக்காக இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டன. அப்பொழுதும் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டது. குற்றாலமலைச் சாதிக் காய்கள் ஐரோப்பியச் சந்தையில் எடுபடவில்லை.