பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கப்படுகிறது. இவ்வழகிய தொடர், தென்வடலாகப் பதினெட்டுக் கல்லும், கிழ மேற்காகப் பன்னிரண்டு கல்லும் நீளமுடையது. இம் மலையின் தென் சரிவும், மேற்குச் சரிவும், கிழக்குச் சரிவும் சமவெளியினின்றும் 4000 அடி செங்குத்தாக உயர்ந்து செல்லுகின்றன. வடக்குச் சரிவு காட்டாறுகளால் அறுத்துச் செல்லப் பட்ட வரிசை வரிசையான படுகைகள் நிறைந்து பிளவுபட்டுக் காணப்படுகிறது. இப் படுகைகள் வடகிழக்குப் பக்கமாக ஓடுகின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்கவை, வரகூர் கோம்பை, மூலைக்குரிச்சி, பெரிய கோம்பை, வாலக் கோம்பை என்பன. நாமக்கல் கோட்டத்திலிருக்கும் இம் மலைப் பகுதி உயர்ந்த ஒரு பீடபூமியைத் தன்னகத்தில் கொண்டு விளங்குகிறது. அப் பீடபூமியானது ஒரு கவிகலன் (basin) போல் நடுவில் தாழ்ந்தும், பக்கங்களில் உயர்ந்தும் உள்ளது. உயர்ந்து செல்லும் இதன் பக்கங்களில் அடுக்கடுக்காக நிலங்களைப் பண்படுத்திப் பயிர்த் தொழில் செய்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து, பச்சைப் பசேலென்று எழில் நலம் கொழித்து விளங்கும் அக் காட்சியைப்போல் வேறு எங்கும் காண்டல் அரிது.

ஆத்தூர் வட்டத்திலிருக்கும் கொல்லி மலைப் பகுதி நாமக்கல் பகுதியினின்றும் மாறுபட்டதாகும். இம் மலையின் தென்மேற்குப் பகுதியானது பயில் நாட் (Pail Nad)டின் பருவுயர் சிகரங்களைக் கொண்டது. இச் சிகரங்களினின்றும் வட சரிவிலுள்ள பள்ளத்தாக்கின் இனிய காட்சிகளைக் காணலாம். அருவிகள் அச்சரிவில் இனிய ஒலியோடு இழிந்து செல்லும். அச்சிற்றாற்றுப் படுகைகளின் உச்சியைக் கடந்து செல்லும் மலை வழிப் பாதையிலிருந்து நோக்கினால் சமவெளிகளையும், அவற்றை வடக்கில் தடுத்து நிறுத்தும் சேர்வராயன், கல்ராயன், தேனாந்தி (Tenande) மலைகளின் இயற்கை யழகையும் கண்டு மகிழலாம். மேற்கிலுள்ள பீடபூமியின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 4000 அடி