பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


பயிர்த் தொழில்:

சேர்வராயன் மலை, நீலகிரி மலை, பழனி மலைகளோடு ஒப்பிடும்போது, கொல்லி மலை முன்னேற்றத்தில் மிகவும் பின்தங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற மலைகளில் உதகமண்டலம், ஏர்க்காடு, கூனூர், கோடைக்கானல் முதலிய குறிஞ்சி நகரங்கள் தோன்றி, மிகுந்த நாகரிகம் பெற்றுவிட்டன. அழகிய மலைப் பாதைகள் சமவெளிகளையும் இம் மலைகளையும் இணைக்கின்றன. இன்றைய நாகரிக வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் இந் நகரங்கள் பெற்று, பிற நாட்டு உல்லாசிகளையும், தமிழகத்துச் செல்வர்களையும் தம்பால் ஈர்க்கின்றன. காஃபி, தேயிலை, இரப்பர், பழவகைகள் முதலியவற்றைத் தம்பால் விளைவித்து நாட்டின் வருவாயைப் பெருக்குகின்றன. பல தொழிற்சாலைகளைத் தம்மகக்தே கொண்டு தொழில்வளம் சிறக்கத் துணைபுரிகின்றன. ஆனால் இத்தகைய முன்னேற்றம் கொல்லி மலையில் இல்லை. கொல்லிமலை இன்னும் பூரணமாக ஆராயப்படவில்லை என்றே சொல்லலாம். போதிய பாதை வசதி கிடையாது. இப்பொழுதுதான் பாதை அமைத்து முடித்திருக்கின்றனர்.

ஆனால் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளை விடக் கொல்லி மலையாளிகள் உழைப்பாளிகள். சேர்வராயன் மலையில் காஃபித் தோட்டங்கள் நிறைய இருப்பதால், மலையாளிகளெல்லாம் தங்கள் பயிர்த் தொழிலைவிட்டு விட்டுக் காஃபித்தோட்டக் கூலிகளாய்ப் பணிபுரிகின்றனர். காரணம் தாமாகப் பயிர்செய்து சம்பாதிப்பதைவிடக் கூலிகளாக வேலைசெய்வதில் அதிக வருவாய் அவர்களுக்குக் கிட்டுகிறது. கொல்லி மலையாளிகளுக்கு இத்தகைய வாய்ப்புக் கிடையாது. குறிஞ்சி நிலத்தைப் பண்படுத்தித் தம் பேருழைப்பால் பயிர்த் தொழிலைச் சிறந்த முறையில் செய்து வாழ்கின்றனர்.