பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சமவெளியில் வாழ்பவர்களைவிடச் சிறந்த முறையில் உழவு புரிகின்றனர் இம்மலையாளிகள்.

கொல்லிமலையின் மீதுள்ள புஞ்சை நிலங்களை இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம். ஏரினால் உழுது பண்படுத்தும் நிலத்தை ‘உழவுக்காடு’ என்றும், களைக் கொட்டால் கொத்திப் பண்டுத்தும் நிலத்தைக் ‘கொத்துக் காடு’ என்றும் கூறுகின்றனர். நஞ்சைநிலப் பயிர்த் தொழிலும் கொல்லி மலையில் உண்டு. 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் இங்குள்ளன. மிக உயர்ந்த பீடபூமிகளிலே இந்நிலங்கள் அமைந்துள்ளன. மலைமீதுள்ள ஈரத்தால் ஊறிவரும் ஒசும்பல்நீர், இந்நிலங்களில் பாய்கிறது. சில நஞ்சை நிலங்கள் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளன. அப் பள்ளத்தாக்குகளில் எப்பொழுதும் நீர் கசிந்து மண் ஈரமாகவே இருக்கும். அவ்விடங்களைப் பண்படுத்தி, வயல்களாக்கி விடுகின்றனர். அவ்விடத்தில் கசியும் நீர் வயல்களில் எப்பொழுதும் தேங்கிநிற்கும். தாழ்ந்த பீடபூமிகளின் மீதும் நஞ்சை நிலங்கள் உண்டு. மலையுச்சியிலிருந்து ஓடிவரும் அருவிகளைத் தடுத்து நிறுத்திச் சிறுசிறு கால்வாய்கள் மூலமாக அந் நஞ்சை நிலங்களிலுள்ள நெல் வயல்களுக்குப் பாய்ச்சுகிறார்கள்.


நெல் :

எப்பொழுதும் ஈரம் கசிந்து கொண்டிருக்கும் பள்ளத்தாக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் நஞ்சை நிலங்கள் ஆழமான சேற்றுக் குழிகளைக் கொண்டிருக்கும். அக் குழிகளில் சில சமயங்களில் உழவர்கள் கழுத்தளவுகூட மூழ்கிவிடுவதுண்டு. அவ்வாறு ஆழ்வதைத் தடுக்கவே நாற்று நடும்போது பலகைகளின் மேல் இருந்துகொண்டு நடுவார்கள். உயர்ந்த பீடபூமிகளில் இருக்கும் நஞ்சை நிலங்கள் எளிதில் உழக் கூடியவை யாகையால் ஆண்டுக்கு இருபோகம் விளையும். ஆனால் தாழ்ந்த பீடபூமிகளிலுள்ள சதுப்பு