பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60



மொச்சை :

கொல்லிமலையில் இராகி வயல்களில் வரிசை வரிசையாக மொச்சை பயிரிடப்படுகிறது. ஆமணக்கோடும், கடுகோடும்கூட இது சில சமயங்களில் பயிரிடப்படும். இதனுடைய இலைகள் நிலத்திற்கு நல்ல உரமாகும். ஜூலை ஆகஸ்டுத் திங்கள்களில் மொச்சை விதைகள் ஊன்றப்படுகின்றன. ஒரு திங்கள் கழிந்ததும், மண்ணைக் கொத்தி விடுவர். மற்றுமோர் திங்கள் கழிந்ததும் களையெடுப்பர். மொச்சை ஆறுமாதப் பயிர். இராகி அறுவடையானதும் இப்பயிர் வயலில் பரவிப்படரும். மிகுபனிக் காலங்களான டிசம்பர் சனவரித் திங்கள்களில் மலரத் தொடங்கும்; பிறகு காய்க்கும். காய்கள் எல்லாம் பசுமையாக இருக்கும்போது அறுவடை செய்ய மாட்டார்கள். அவைகள் நன்றாக உலர்ந்த பிறகு சனவரி இறுதியிலோ அல்லது ஃபெப்ருவரி முதலிலோ அறுப்பர். சில நாட்கள் மறுபடியும் நன்றாகக் காய விடுவர். அதன் பிறகு காய்களைத் தனியே பிரித்தெடுத்து மாடுகளின் காலில் மிதிக்க விட்டோ, அல்லது தடியால் அடித்தோ மொச்சையைத் தனியாகப் பிரித்தெடுப்பர்.


கனிப்பொருள்கள்

சேலம் மாவட்டத்தில் பூமியில் புதைந்து கிடக்கும் கனிப் பொருள்களில் இரும்புத்தாது குறிப்பிடத்தக்க ஒன்று என்பதை முதலிலேயே கூறினோம். கொல்லி மலையில் அளவற்ற இரும்புத்தாது மண்டிக்கிடக்கிறது. இரும்பு உருக்கும் தொழில் சேலம் மாவட்ட மக்களுக்குக் கைவந்த ஒரு கலை; தொன்மையான கலை. சேலம், ஆத்தூர், ஓமலூர், திருச்செங்கோடு ஆகிய கோட்டங்களிலுள்ள சிற்றூர்களிலும், ஓசூர், கிருட்டினகிரி எல்லையிலும் இத்தொழில் மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் இரும்பை உருக்குவதற்குப் பயன்படுத்தப்