பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

முடிவானதாகும். போதமலையிலும் அதற்கடுத்தாற்போலுள்ள பள்ளத்தாக்கிலும் வாழும்படியான கொல்லி மலையாளிகள் கீழூரிலிருக்கும் ‘நாட்டான்’ என்ற தலைவனின் ஆணைக்குட்பட்டவர்கள். பவானி வட்டத்திலிருக்கும் கொல்லி மலையாளிகளும் இவன் ஆணைக்குட்பட்டவர்களே. ஆனால் இவனுடைய தீர்ப்பில் திருப்தியடையாதவர்கள் பயில் நாட்டுப் பெரிய பட்டக்காரனிடம் நீதி கேட்டுச் செல்வதுண்டு. வேலப்பூர் அரசன் இளைஞனாக இருந்தால், அவன் தாயாகிய இராணி மந்திரியின் துணைகொண்டு ஆட்சி செலுத்துவதுண்டு.

பச்சை மலையாளிகள் மூன்று நாட்டினராகப் பிரிந்து வாழ்கின்றனர். முதல் இரு நாடுகளான வெண்ணாடும், தென்புற நாடும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளன. மூன்றாவது நாடான அத்தி நாடு, ஆத்தூர் வட்டத்திலுள்ள பச்சை மலையில் உள்ளது. பச்சை மலையாளிகள் இன்னும் ஆத்தூர் வட்டத்திற்கப்பால், தும்பல் பள்ளத்தாக்கிலும், வசிட்ட நதிப் பள்ளத்தாக்கின் உச்சியிலும், அரனூத்து மலையிலும், மஞ்சவாடிக் கணவாயிலும், சேர்வராயன் மலையின் மேற்கு அடிவாரத்திலுள்ள கஞ்சேரி, பாலமேடு என்னும் சிற்றூர்களிலும், தொப்பூர் ஆற்றுக்கரையிலுள்ள வேப்பாடியிலும் வாழ்கின்றனர்.

சாதி நிர்வாகத்திற்காக இவர்கள் பலதுணை நாடுகளாகவும் கரை அல்லது தமுக்குகளாகவும் பிரிந்து வாழ்கின்றனர். எடுத்துக்காட்டாகப் பச்சை மலையிலுள்ள நல்லியக் கவுண்டன் நாடு, காளத்திக் கவுண்டன் நாடு, பச்சை மலைக்கு மேற்கிலுள்ள மண்மலை நாடு, பைத்தூர் நாடு என்பன குறிப்பிடத்தக்கவை. தும்பல் பள்ளத்தாக்கில் உள்ள மாமஞ்சியிலும், அரனூத்து மலையிலுள்ள ஆலடிப்பட்டியிலும், பேளூருக்கு வடக்கில் வசிட்ட நதிப் பள்ளத்தாக்கில் உள்ள கீரிப்பட்டியிலும்,