பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. குலமும் கோவும்

பழந் தமிழ் நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அன்னார் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்குகின்றன.

நாகர்

நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாக நாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி மாநகரில் அரசாண்டான் என்று பண்டைக் கதை கூறும். அன்றியும், தமிழ் நாட்டில் நிறுவப் பெற்ற தலைச் சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப் புலவருடன் வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் என்று தெரிகின்றது. இன்னும், கடைச் சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர் இருந்தனர். நன்னாகன், இளநாகன், வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந்தொகை நூல் களிற் சேர்க்கப் பட்டுள்ளன. தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம், நாகர்கோவில் முதலிய ஊர்களின் பெயர்களில் நாகர் நாமம் விளங்குகின்றது.