பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் பேரும்



1. தமிழகமும் நிலமும்

தமிழகம்

பழம் பெருமை வாய்ந்த பாரதநாட்டின் தென்பால் விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர். பொதுவுற நோக்கும்பொழுது பழந் தமிழகத்தில் மேல்நாடு சேரனுக்கும், கீழ்நாடு சோழனுக்கும், தென்னாடு பாண்டியனுக்கும் உரியன வாயிருந்தன என்பது புலனாகும். இங்ஙனம் மூன்று கவடாய் முளைத்தெழுந்த தமிழகம் மூவேந்தரது ஆட்சியில் தழைத்தோங்கி வளர்ந்தது. 1

நிலவகை

நால் வகைப்பட்ட நிலங்கள். தமிழகத்தில் அமைந் திருக்கக் கண்டனர் பண்டைத் தமிழர். மலையும், மலைசார்ந்த இடமும் ஒரு வகை. காடும், காடு சார்ந்த இடமும் மற்றொரு வகை, வயலும், வயல் சார்ந்த இடமும் பிறிதொரு வகை. கடலும், கடல் சார்ந்த இடமும் இன்னொரு வகை. இந்நான்கும். முறையே, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பெயர்களாற் குறிக்கப் பட்டன. நால்வகை நிலங்களையுடைய காரணத்தால்,