பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

111

திருமாலுக்குக் கோயில் கட்டியும், குளம் வெட்டியும் பணி செய்தான் மகேந்திரன். அவ்வூர் முன்னாளில் பெரியதொரு நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. அந் நாளில் மகேந்திர வாடியின் கீழ வீதியாயிருந்த இடம், இப்பொழுது தனியூராகக் கீழவீதி என்னும் பெயரோடு அதற்குக் கிழக்கே மூன்று மைல் தூரத்திற் காணப் படுகின்றது. குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில் ஆக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் மகேந்திரன் காலத்தில் எழுந்தது என்பர். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய அண்ணல் வாயில் என்னும் சித்தன்ன வாசற் குகைக் கோவிலில் அவன் காலத்துச் சிற்பமும் ஓவியமும் சிறந்து விளங்குகின்றது.

இன்னும், பல்லவ மன்னர் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களில் ஒன்று சென்னைக்கு அண்மையிலுள்ள பல்லா வரம் ஆகும். பல்லவபுரமே பல்லாவரம் என மருவியுள்ளது. அங்குள்ள குகைக் கோயிலில் மகேந்திரவர்மன் விருதுப் பெயர்கள் பொறிக்கப் பட்டிருத்தலால் அஃது அப் பல்லவன் காலத்தே எழுந்த ஊர் என்று கருதலாம்.

நரசிங்கன்

மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அரசாண்டவன் நரசிங்க வர்மன். வாதாபி கொண்ட நரசிங்கன் என்று சாசனங்களில் புகழப்படுபவன் அவனே. திருத்தொண்டர் புராணத்திற் குறிக்கப்படுகின்ற சிறுத்தொண்டரைத் தலைவராகக் கொண்ட பெருமை வாய்ந்தவனும் அவனே என்பது நன்கு விளங்குகின்றது. பரஞ்சோதி என்னும் இயற்பெயருடைய சிறுத்தொண்டர்.