பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

115


தொண்டை நாடு இவன் கால முதல் சோழர் ஆட்சியில் அமைவதாயிற்று. இராஜ கேசரி என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. தஞ்சை நாட்டுப் பண்டார வாடைக்கு அண்மையில் இராஜகிரி என்ற சிற்றுார் உள்ளது. காவிரியின் தென்கரையில் உள்ள அவ்வூர் முன்னாளில் இராஜகேசரி சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. இராஜகேசரிப் பெயரே இராஜகிரி என மருவிற்றென்பர். இப்போது இராஜகிரி மகமதியர் வாழும் ஊராக இருப்பினும்,பழைய கோவில்களின் குறிகளும் அடையாளங்களும் அங்குக் காணப்படுகின்றன.

பராந்தகன்

தஞ்சைச் சோழர் குடியின் ஆதிக்கத்திற்கு அடிப்படை கோலியவன் பராந்தகமன்னன். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரியணையேறிய இம்மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புரிந்தான்;பாண்டிய மன்னனை இருமுறை வென்று,மதுரையைக் கைப்பற்றினான்; மாற்றானுக்கு உதவிசெய்த இலங்கை மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்று ஈழ நாட்டையும் கைக்கொண்டான்.

இவ்வரசனது விருதுப் பெயர்களில் ஒன்று வீர நாராயணன் என்பதாகும். ஆர்க்காட்டு நாட்டில் வீர நாராயணபுரம் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் சில உண்டு. அவை வீராணம் என வழங்கும். தென்னார்க் காட்டிலுள்ள வீராணத்தேரியும் இவன் பெருமையை விளக்குவதாகும்.