பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ஊரும் பேரும்


மதுரையை வென்று கைப்பற்றிய இம் மன்னனுக்கு மதுராந்தகன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இக் காலத்தில் செங்கற்பட்டு நாட்டில் சிறந்து விளங்கும் மதுராந்தகம் என்ற ஊர் இவனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம் போலும் கடப்பேரி என்னும் பழமையான ஊரின் அருகே எழுந்தது மதுராந்தகம்.

வளவன் மாதேவி

வளவன் மாதேவி என்பாள் பராந்தக சோழனுடைய தேவி. அவள் பெயரால் நிலைபெற்ற சதுர்வேதி மங்கலம் வளவன் மாதேவி என வழங்கு வதாயிற்று. தென்னார்க் காட்டு எரும்பூர் என்னும் உருமூர்க் கோயிற் சாசனத்தால் வளவன் மாதேவி என்ற ஊர் மேற்கா நாட்டைச் சேர்ந்த பிரம தேயம் என்பது விளங்கும். அவ்வூர் இப்பொழுது வளைய மாதேவி என்னும் பெயரோடு சிதம்பரம் வட்டத்தில் உள்ளது.

உத்தமசீலி

உத்தமசீலி என்பான் பராந்தகன் மைந்தருள் ஒருவனாகக் கருதப்படுகின்றான். அவன் பெயரால் அமைந்த உத்தம சீலி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் இப்பொழுது உத்தம சேரி என வழங்குகின்றது.

கண்டராதித்தன்

பராந்தக சோழனுக்குப் பின்னே அரசு புரிந்தவன் அவன் மைந்தனாகிய கண்டராதித்தன், 'ஈசன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம்' என்று கருதி வாழ்ந்த இக்காவலனைச் சிவஞானகண்டராதித்தன் என்று சாசனம் சிறப்பிக்கின்றது.தில்லைச் சிற்றம் பலத்து இறைவன்மீது இம்மன்னன் பாடிய திருவிசைப்பா