பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

123


வட்டத்திலுள்ள மகாதானபுரத்தின் உட்கிடையாகிய சிற்றுார் பழைய சங்கடம் என்னும் விந்தையான பெயரைக் கொண்டுள்ளது. பழைய ஜயங்கொண்ட சோழபுரம் என்பதே நாளடைவில் பழைய சங்கடமாய் முடிந்தது என்பர்.

ஜனநாத சோழன்

இராஜராஜனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய ஜனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.

“குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு”

என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி ஜனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராஜராஜன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் ஜனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. ஜனநாதநல்லூர் என்னும் மறுபெயர்,சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள ஆருேக்கும்,தென் ஆர்க்காட்டைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் வயிரமேக புரத்துக்கும், செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த வாயலூர் என்னும் திருப்பில வாயிலுக்கும் வழங்குவதாயிற்று. பட்டுக்கோட்டையிலுள்ள சோழபுரம் என்னும் மும்முடிச் சோழபுரத்தின் வழியாகச் சென்ற சாலை, ஜனநாதன் பாதை என்று பெயர் பெற்றது. மதுரையின் மருங்கிலுள்ள தேனூர், ஜனநாத சதுர்வேதி மங்கலமாயிற்று. மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் ஜனநாதபுரம் என்ற மறு பெயர் பெற்றது.