பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

குலமும் கோவும்


சிவாலயம் குலோத்துங்கனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும்.கட்டுமான முறையில் அது தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருப்பதாக அறிந்தோர் கருதுகின்றார்கள்.இன்னும் சீர்காழி வட்டத்திலுள்ள திரிபுவன வீரமங்கலம் என்ற ஊரும் இக்குலோத்துங்கன் பெயர் பெற்றதாகத் தோன்று கின்றது.

பல்லவராயன்

இரண்டாம் இராஜராஜன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவராயர் என்பவர் தலைமை அமைச்சராக விளங்கினார்.அம்மன்னன் முதுமையுற்ற போது தனக்குப்பின் பட்ட மெய்தி அரசாளுதற்குரிய மைந்தன் இல்லாமையால் மனம் வருந்தினான். அந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து அவன் மரபைச் சேர்ந்த இளம் பிள்ளையைப் பல்லவராயர் அழைத்து வந்து முடிசூட்டி அரசியற் பொறுப்பனைத்தையும் வகித்து முறையாகவும் திறமையாகவும் நடத்தினார். இவ்வாறு நாட்டுக்கும் அரசுக்கும் நலம் புரிந்த பல்லவராயர் காலஞ்சென்ற பொழுது அவர் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அம் மன்னனால் இறையிலியாக அளிக்கப்பட்ட ஊர் பல்லவராயன் பேட்டை என்று பெயர் பெற்றது.112

பரகேசரி

சிதம்பரத்துக்கு அண்மையில் பரகேசரி நல்லூர் என்னும் ஊர் உள்ளது. பரகேசரிப் பட்டம் உடைய மன்னன் காலத்தில் அஃது உண்டாயிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. அங்கு இருங்கோளன் என்னும் குறுநில மன்னன் கட்டிய கோவில் விக்கிரம சோழேச்சரம் என்று பெயர் பெற்றது.113