பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஊரும் பேரும்


சரபோசி. அவன் பெயர் தஞ்சையிலுள்ள சரபோசிராசபுரம் என்னும் ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பட்டம் எய்திய துளசி மன்னன் பெயரும் சில ஊர்ப்பெயர்களில் அமைந்துள்ளது. துளசாபுரம், துளசேந்தி புரம், துளசேந்திரபுரம் என்ற மூன்று ஊர்கள் தஞ்சை நாட்டிலே காணப்படுகின்றன.

தஞ்சையில் மராட்டிய மன்னருக்குக் கண்போல் விளங்கிய அமைச்சர் பெயரும் ஊர்ப் பெயராக வழங்கு கின்றது. பாவாசி என்பவன் அத்தகைய அமைச்சர்களில் ஒருவன். தஞ்சை நாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்தி லுள்ள வாவாசிக் கோட்டை என்னும் ஊரின் பெயர் அவன் பெயரே ஆகும். மானோசி என்பவன் மற்றோர் அமைச்சன். மானோசியப்பச் சாவடி என்னும் இடம் அவன் பெயரால் நிலவுகின்றது.

விஜய நகர மன்னர்

விஜய நகர மன்னருள் பல்லாற்றானும் தலை சிறந்தவன் கிருஷ்ண தேவராயன். இம் மன்னன் பெருமையை,

“படைமயக் குற்றபோதும் படைமடம் ஒன்றி லாதான்
மடைசெறி கடகத் தோளான் மதிக்குடை மன்னர் மன்னன்.”

என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடிப் போந்தார்.117 மாற்றாரை வென்று மாபெரும் புகழ்பெற்று வாழ்ந்த கிருஷ்ண தேவன் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமக விழாவிற்குச் செல்லும் வழியில் பொன்னேரி வட்டத்தி லுள்ள அரகண்டபுரம் என்னும் ஊரிலே தங்கினான்.