பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

145


மாணிக்கவாசகர். மணி மொழிகளால் அமைந்த திருவாசகத்தைப் பாடிய பின்னரே மாணிக்க வாசகர் என்னும் பெயர் அமைவதாயிற்று. அதற்கு முன் திருவாதவூர் என்றே அவர் குறிக்கப்பெற்றார். அவர் பிறந்தமையால் பாண்டி நாட்டிலுள்ள வாதவூர், திருவாதவூர் ஆயிற்று. அவ்வாறே திருநாவுக்கரசர் பிறந்தமையால் பெருமையுற்ற ஊர் ஆமூர் ஆகும். “தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர்” என்று திருத்தொண்டர் புராணத்திற் சிறப்பிக்கப்பட்ட ஊர் இப்பொழுது தென் ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில் உள்ளது. ஆமூர் என்னும் மூதூர் திருநாவுக்கரசர் பிறந்த ஊராதலால் திருவாமூர் ஆயிற்று.

திருமழிசையாழ்வார்

சென்னைக்கு மேற்கேயுள்ள பூந்தமல்லி என்னும் பூவிருந்த வல்லிக்கு அண்மையில் அமைந்தது திரு மழிசை. இவ்வூரிற் பிறந்து இளமையிலேயே பரஞானம் பெற்று, திருவல்லிக்கேணியில் நெடுங்காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்து, கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் பரமபதம் அடைந்தார் ஓர் ஆழ்வார். அவர் பிறந்தமையால் மழிசை திருமழிசை ஆயிற்று. அவ்வாழ்வாரும் திருமழிசை ஆழ்வார் என்றே வழங்கப் பெறுகின்றார்.