பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஊரும் பேரும்


கொண்டாடப்பட்டது. தொண்டை நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் பொய்யாமொழி மங்கலம் என்னும் பெயருடைய ஊர் ஒன்றுள்ளது. அங்குக் கடிகை என்ற தமிழ்ச் சங்கம் இருந்ததென்று திருக்கச்சூர்ச் சாசனம் தெரிவிக்கின்றது. அவ்வூருக்கும் பொய்யாமொழிப் புலவர்க்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகின்றது.

காரிகைக் குளத்தூர்

சோழ மண்டலத்திலுள்ள மிழலை நாட்டில் தமிழ் வளர்த்த தலைவர் பலர் தழைத்து வாழ்ந்தார்கள். அன்னவருள் ஒருவனாகிய கண்டன் மாதவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தினன், மிழலை நாட்டைச் சேர்ந்த நீடூர்க் கோவிலிற் கண்ட சாசனப் பாட்டால் அவன் செய்த திருப்பணிகள் அறியப்படுகின்றன. "புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் விருப்புறச் செய்தோன்” என்று புகழப்படுதலால் பட்டி மண்டபம் ஒன்று அவன் கட்டினான் என்பது விளங்கும். இத்தகைய மிழலை நாட்டுக் குறுநில மன்னனைக் “காரிகைக் குளத்தூர் மன்னவன்” என்று அச்சாசனம் கூறுதல் கருதத் தக்கதாகும்.தமிழில் யாப்பருங்கலக் காரிகை என்னும் செய்யுளிலக்கணம் செய்தவர் அமிதசாகரர் என்ற சமணமுனிவர் என்பது அந் நூற்பாயிரத்தால் அறியப் படுகின்றது. அவ்வாசிரியர்பால் அன்பு கூர்ந்து, அவரை அழைத்து வந்து, குளத்தூரில் வைத்து ஆதரித்துக் காரிகை நூல் இயற்றுவித்தவன் மாதவன் குலத்துதித்த மிழலை நாட்டுத் தலைவன், காரிகையின் மணம் கமழ்ந்த குளத்தூர், காரிகைக்குளத்தூர் என வழங்கலாயிற்று.