பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.தேவும் தலமும்

தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு.பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக் கின்றது.அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன.இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவ னோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?

பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய காரணத்தால் ஆலமர் கடவுள் ஆயினார்.முருகவேள் கடம்ப மரத்தில் விரும்பி உறைதலால் கடம்பன் என்று பெயர் பெற்றார்.2 பிள்ளையார் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்.

காவிரிக் கரையில் அமைந்த நெடுஞ்சோலையில் ஒரு வெண்ணாவல் மரத்திலே ஈசன் வெளிப்பட்டார்.இன்னும்,காஞ்சி மாநகரத்தில் இறைவன் மாமரத்தின் அடியிற் காட்சியளித்தார். அம் மாமரமே கோயிலாய் ஏகாம்பரம் என்றும், ஏகம்பம் என்றும் பெயர் பெற்றது.4

இன்னும், தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆன்றோர் பலர், மரங்களின் கீழிருந்து மெய்யுணர்வு பெற்றுள்ளார்கள். திருவாசகம் பாடிய மணிவாசகர் குருந்த மரத்தடியில் ஈசன் திருவருளைப் பெற்றார். திருமால் அடியார்களிற்