பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஊரும் பேரும்


பழையனுர் ஆலங்காடு என்று தேவாரத்திற் குறிக்க பெற்றுள்ளது.20 அது தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த ஊர் என்று சாசனம் கூறும். மூவர் பாமாலையும் பெற்ற அம்மூதூர் காரைக்கால் அம்மையார் சிவப்பேறு பெற்ற பெருமையும் உடையதாகும்.

பனங்காடு

பழங்காலத்தில் தொண்டை மண்டலத்துக் கலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த கழுமல நாட்டில் பனங்காடு என்னும் பதி அமைந்திருந்த தென்று சாசனம் கூறும்:21 பனங்காட்டின் இடையே பரமன் கோயில் கொண்டமையால் பனங்காட்டூர் என்பது அவ்வூரின் பெயராயிற்று.22 அப்பதியில் அமர்ந்த பெருமானை,

“பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டுரானே
மாட்டுர் அறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே”

என்று சுந்தரர் பாடியுள்ளார். இக்காலத்தில் வட ஆர்க்காட்டுச் செய்யார் வட்டத்தில் உள்ளது திருப்பனங்காடு.

மற்றொரு பனங்காட்டூரும் தேவாரப் பாடல் பெற்றதாகும்.விழுப்புரத்திற்கு வடக்கே ஐந்து மைல் அளவிலுள்ள பனையபுரம் என்னும் ஊரும் பனங்காட்டூர் என்பர். இப்பகுதியைப் பாடியருளிய திருஞானசம்பந்தர், “புறவார் பனங்காட்டுர்” என்று பாசுரந்தொறும் குறித்தலால், அதுவே அதன் முழுப் பெயர் என்று கொள்ளலாகும்.23