பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மலையும் குன்றும்

திருவண்ணாமலை

ஈசனார் கோவில் கொண்டு விளங்கும் திருமலைகளைத் தொகுத்துரைத்தார் திருஞான சம்பந்தர்:

“அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறகலா
முதுகுன்றம் கொடுங்குன்றமும்"

என்றெடுத்த தேவாரத்தில் அமைந்த அண்ணாமலை வட ஆர்க்காட்டிற் சிறந்து திகழும் திருவண்ணா மலையாகும். ஆதியும் - அந்தமும் இல்லாத இறைவன் அரும் பெருஞ்சோதியாகக் காட்சி தரும் திருமலை, அண்ணாமலை என்பர்.1

திருஈங்கோய் மலை

திருச்சி நாட்டைச் சேர்ந்தது ஈங்கோய் மலை. அங்கு எழுந்தருளிய இறைவனை ஈங்கோய் நாதர் என்று தமிழ் மக்கள் போற்றினார்கள்.அது பாடல் பெற்ற மலைப் பதியாதலால்,திருவீங்கோய் நாதர் மலையாயிற்று. இப்பொழுது அப்பெயர் திருவிங்க நாதர் மலையென மருவி வழங்குகின்றது.

அத்தி

தொண்டை நாட்டு வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்த அத்தியென்னும் தலம்,பழம் பெருமை வாய்ந்ததென்பது சாசனத்தால் விளங்கும். அங்கமைந்த பழைய ஆலயம் அகத்தீச்சுரமாகும். பண்டைத் தமிழரசர் பலர் அதனை ஆதரித் துள்ளார்கள்.இராஜராஜ சோழன் காலத்தில் கேரளாந்தக நல்லூர் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது.