பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

9

ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ் சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.

தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையு முடைய அக் காவில் நின்றருளும் பெருமானை,

“விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில்

வெஃகாவில் திருமாலை”

என்று திருமங்கை ஆழ்வார் போற்றினார். அவர் திருவாக்கின் பெருமையால் “விளக்கொளி கோயில்” என்பது திருத்தண்காவின் பெயராக இக்காலத்தில் வழங்குகின்றது. இன்னும், காவளம்பாடி என்பது சோழ நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்று. சோலை வளம் பொருந்திய இடத்தில் அமைந்த அப் பாடியைக் காவளம் பாடி மேய கண்ணனே என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.

பொழில்

மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, பொழில் அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம்