பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறும் குளமும்

ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.

“நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறும் திருவையாறும் தெள்ளாறும்”

என்று அப்பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறு பதிகள் குறிக்கப்படுகின்றன.அவற்றின் தன்மையை முறையாகக் காண்போம்.

திருநள்ளாறு

காரைக்காலுக்கு அண்மையில் உள்ளது திரு நள்ளாறு. நளன் என்னும் மன்னவன் கிங்கள்ள ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்.

“வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே”

என்பது தேவாரம்.அதனால் சனி வழிபாடு அங்கு சிறப்புற நடைபெறுகின்றது.

பழையாறை

முன்னாளில் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிய பதிகளுள் ஒன்று பழையாறாகும்.சோழ நாட்டு அரசுரிமை யேற்கும் மன்னர்,மகுடாபிஷேகம் செய்து கொள்ளுதற்குரிய சிறந்த நகரங்களுள் பழையாறும் ஒன்றென்று சேக்கிழார் கூறுதலால் அதன் சீர்மை விளங்கும்.1 பிற்காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது முடிகொண்டான் என்ற ஆற்றின் கரையில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது அப்பதி.3