பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஊரும் பேரும்

வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத் தமிழர் அதற்குப் பைம்பொழில் என்று பெயரிட்டார்கள். அவ்வழகிய பெயர் இக்காலத்தில் பம்புளி என மருவி வழங்குகின்றது.

தண்டலை

சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் - எனவும் வழங்கும். திருச்சிராப் பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ்சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித் தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.

சோலை

சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது. பழமுதிர் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும். சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின்