பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

191


சரித்திரத்திலும், நந்திக் கலம்பகத்திலும் குறிக்கப்படும் ஊர், பழைய வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்ததென்றும், அங்குள்ள ஈசன் கோயில் திருமூலத்தானம் என்னும் பெயருடைய தென்றும் கல்வெட்டுக்கள் கூறும்.7

கடிக்குளம்

பழமை வாய்ந்த சிவப்பதிகளுள் மூன்று குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞானசம்பந்தர் பாட்டால் விளங்குகின்றது. அவற்றுள் ஒன்று பாடல் பெற்றுள்ள கடிக்குளம் என்ற ஊராகும். குளிர் பூஞ்சோலையினிடையே அமைந்த கடிக்குளப்பதியில் கோயில் கொண்டிலங்கும் ஈசனை

“கடிகொள் பூம்பொழில் குழ்தரு
கடிக்குளத் துறையும் கற்பகம்”

என்று போற்றினார் திருஞான சம்பந்தர். அவர் திருவாக்கின் சிறப்பினால் இப்பொழுது கற்பகனார் கோயில் என்பது கடிக்குளத்தின் பெயராக வழங்குகின்றது.ஏனைய குளங்களின் வகை, திருநாவுக்கரசரது பாட்டால் தெரிகின்றது. “வளைகுளமும் தளிக்குளமும் நல்இடைக்குளமும் திருக் குளமும் இறைவன் கோயில் கொண்ட குளங்கள் என அவர் கூறிப் போந்தார்.

வளைகுளம்

இவற்றுள் வளைகுளம் என்று முன்னாளில் வழங்கிய ஊர் இந்நாளில் வளர்புரம் என்னும் பெயர் பெற்றுள்ளது.வட ஆர்க்காட்டு ஆர்க்கோண வட்டத்திலுள்ள வளர்புரத்தில் பழமையான சிவாலயம் ஒன்று உண்டு.தொண்டிச் சரம் என்பது அதன் பெயர்.