பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும் 205


அன்பில் ஆலந்துறை

ஈசனருளைப் பெறுதற்குரிய துறைகளுள் ஆலந்துறை சாலச் சிறந்ததென்று தெரிகின்றது. ஆலமர் கடவுளாகிய சிவபெருமானைப் பல ஆலந்துறையில் வழிபட்ட முறை, திருப்பாசுரங்களாலும் சாசனங்களாலும் விளங்கும். ஓர் ஆலந்துறை அன்பில் என்ற ஊரில் அமைந்திருந்தது. அதனை அன்பிலாலந்துறை என்றே தேவாரம் பாடிற்று.

புள்ள மங்கை ஆலந்துறை

இன்னும், காவிரிக் கரையில் அமைந்த புள்ள மங்கை என்னும் பதியில் ஈசன் கோயில் கொண்ட இடமும் ஓர் ஆலந்துறையாகும்.

“புலன்கள் தமைவென் றார்புகழ்
அவர்வாழ் புளமங்கை
அலங்கல் மலிசடை யானிடம்
ஆலந் துறையதுவே”

என்னும் தேவாரப் பாசுரம் இதனைத் தெரிவிக்கின்றது.

அந்துவ நல்லூர் ஆலந்துறை

காவிரியின் வடகரையில் அமைந்தது புள்ள மங்கை ஆலந்துறை. அந் நதியில் தென்கரையிலும் ஓர் ஆலந்துறை உண்டென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும். காவிரியாற்றின் தென் கரையில் அமைந்த திருக்கோயில்களை வழிபடப் போந்த திருஞான சம்பந்தர் திருவாலந்துறை முதலாய தலங்களை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.19