பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 ஊரும் பேரும்

எனவே, அவர் குறித்த ஆலந்துறை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் அளவில் காவிரியின் தென் கரையில் அமைந்த அந்துவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஆலயமே ஆதல் வேண்டும். இக்காலத்தில் அந்த நல்லூர் என வழங்குகின்ற அந்துவநல்லூரில் ஆலந்துறை யென்னும் பழமையான ஆலயம் உண்டென்று சாசனம் கூறும்.20 அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் வடதீர்த்த நாதர் என்று பிற்காலக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலும் இதனை வலியுறுத்துவதாகும். வடதீர்த்தம் என்பது ஆலந்துறையைக் குறிக்கும் வடசொல்.

திருப்பழுவூர் ஆலந்துறை

திருவையாற்றுக்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உடையார் பாளைய வட்டத்தில் திருப்பழுவூர் என்னும் பழம்பதி யொன்று உள்ளது. அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதாகும். அங்கு ஆலமரச் சோலையில் ஆண்டவன் கோயில் கொண்டமையால் ஆலந்துறை யென்பது அதன் பெயராயிற்று.21 ஆலந்துறையில் அமர்ந்தருளும் ஈசனை இந் நாளில் வட மூலநாதர் என்பர். பிற்காலத்தில் பழுவூர், கீழப்பழுவூர் எனவும், மேலப் பழுவூர் எனவும் இரண்டாகப் பிரிந்தது. பாடல் பெற்ற பழுவூர் கீழப் பழுவூர் ஆகும்.

ஏமப்பேருர் ஆலந்துறை

தென்னார்க்காட்டிலுள்ள ஏமப்பேரூர் என்னும் வைப்புத் தலத்தில் விளங்கும் ஆலயத்தின் பெயரும் ஆலந்துறை என்பதாகும்.22 திருவாலந்துறையுடைய பெருமானுக்கு மூன்று கால வழிபாடு நாள்தோறும் முறையாக நடைபெறும் வண்ணம் நலவூர் வாசிகள் நல்கிய நிவந்தம் கல்வெட்டிற் காணப்