பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

ஊரும் பேரும்


கூறுகின்றது. “விடைய தேறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்” என்று திருஞான சம்பந்தர் அதனைப் போற்றினார். சலந்தரன் என்னும் அசுரனை ஈசன் சங்காரம் செய்த இடம் அவ் வீரட்டம் என்பர்.

ஆருர்-மூலட்டானம்

திருவாரூர் பழமையும் பெருமையும் வாய்ந்த பல திருக்கோயில்களையுடையது.அவற்றுள்ளே தலை சிறந்தது பூங்கோயில் என்னும் புகழ் பெற்ற மூலட்டான மாகும். அங்குப் பழங்காலத்தில் புற்றிலே ஈசன் வெளிப்பட்டமையால் புற்றிடங் கொண்டார் என்றும், வன்மீகநாதர் என்றும் அவர் வழங்கப் பெறுவர்.

“இருங்கனக மதிலாரூர் மூலட்டானத்
தெழுந்தருளி யிருந்தானை"

என்ற திருநாவுக்கரசர் பாசுரத்தில் மூலட்டானம் குறிக்கப் பட்டுள்ளது.

பொன்னம்பலம்

தமிழ்நாட்டுக் கோயில்களுள் தலை சிறந்து விளங்குவது தில்லைச் சிற்றம்பலம் ஆகும். “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்று தேவாரம் பாடிற்று. அங்கு ஆனந்த நடனம் புரியும் இறைவனை அம்பலவாணன் என்பர். சிற்றம் பலத்தின் சீர்மையறிந்த தமிழ் மன்னர் அதனைப் பொன்னம்பலம் ஆக்கினர். ஆகவே, கனகசபை என்ற வடமொழிப் பெயரும் அதற்கு அமைந்தது.9

வெள்ளியம்பலம்

மதுரை யம்பதியில் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் ஓர் அம்பலம் உண்டு. அது வெள்ளியம்பலம் எனப்படும்.