பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

ஊரும் பேரும்


என்ற தேவாரத்தால் வெண்ணாவலே ஈசன் கோயில் என்பது நன்கு விளங்குகின்றது. இக் கோயில் வடமொழியில் ஜம்புகேசுரம் எனப்படும்.

சாத்தமங்கை-அயவந்தி

இக்காலத்தில் செய்யாத்த மங்கையென வழங்கும். திருச்சாத்த மங்கை தேவாரப் பாடல் பெற்ற பழம்பதி. அழகிய சோலை சூழ்ந்த அப்பதியினை “ஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி” என்று சேக்கிழார் குறித்தருளினார். சாந்தை என்பது சாத்த மங்கையின் குறுக்கம். அப்பதியில் அமைந்த திருக்கோயிலின் பெயர் அயவந்தியாகும். “அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தி” என்று திருநாவுக்கரசர் குறித்துப் போந்த ஆலயம் இதுவே.

அயவந்தியில் அமர்ந்து அடியாரது அரந்தை கெடுத்தருளும் இறைவனை,

“கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம் அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே.”

என்று திருஞான சம்பந்தர் பாடியருளினார். எனவே, அயவந்தி என்பது சாத்தமங்கையில் உள்ள ஆண்டவன் கோயில் என்பது இனிது அறியப்படும்.

கரையூர்-பாண்டிக்கொடுமுடி

கொங்கு நாட்டைச் சேர்ந்த திருப்பாண்டிக் கொடுமுடி பாடல் பெற்றதொரு பழம்பதி. காவிரியாற்றின் கரையில் இனிதமைந்துள்ள இப் பதியை,

“பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
காண்டிக் கொடுமுடி யாரே”