பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோயிலும் வாயிலும்

மாடக்கோயில்

தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன.அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார்.1

இன்னும் வைகல் என்னும் பதியிலுள்ள மாடக் கோவில் கோச்செங்கணான் கட்டியதென்பது,

“வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே”

என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் விளங்கும்.

அரிசிலாற்றங் கரையில் அமைந்த திரு அம்பர் மாநகரில், செங்கணான் கட்டிய கோயிலில் சிவபெருமான் வீற்றிருந்த செம்மை,

“அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே”

என்னும் தேவாரத்தால் விளங்குகின்றது.

திரு ஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தில் வெளிப் பட்ட ஈசனுக்கு அவ் வேந்தன் திருக்கோயில் எடுத்தான் என்று சேக்கிழார் அருளிப் போந்தார்.2