பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

ஊரும் பேரும்


பெருங்கோயில்

ஈசனார் வீற்றிருக்கும் பெருங்கோயில் எழுபத்தெட்டு என்று கணக்கிட்டார் திருநாவுக்கரசர்.

“பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்”

என்று அவர் பாடுகின்றார். இப்பாசுரத்திற் குறிக்கப்பட்ட பெருங்கோயில் அனைத்தும் இக் காலத்திற் காணப்படாவிடினும் தேவாரத்தில் அவற்றைப் பற்றிய சில குறிப்புண்டு.

இந்நாளில் கொடவாசல் என வழங்கும் குடவாயிற் பதியில் ஒரு பெருங்கோயில் இருந்தது. நாகபட்டினத்திற்கு அண்மையிலுள்ள கீழ் வேளுரில் அமைந்த ஆலயமும் பெருங்கோயில் என்று பேசப்படுகின்றது. அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கலய நல்லூர் என்னும் பதியில் ஒரு பெருங் கோயில் உண்டு. பூங்கமலப் பொய்கையின் இடையே அழகுற இலங்கிய அவ்வாலயத்தைச் சுந்தரர் பாட்டில் எழுதிக் காட்டியுள்ளார்.

“தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள் பெருங்கோயில் தனில்தக்க வகையாலே”

எழுந்தருளிய ஈசனை அவர் மகிழ்ந்து போற்றுகின்றார்.

தலைச்சங்காடு என்னும் பதியில் பிறிதொரு பெருங் கோயில் இருந்ததென்பது,

“தண்டலையா ர்தலையாலங் காட்டி னுள்ளார் தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்”

என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படுகின்றது.