பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

ஊரும் பேரும்


கோயில் திருஞாழற் கோயிலாகும்.ஞாழல் என்பது கொன்றை மரத்தின் ஒரு வகை. புலிநகக் கொன்றை என்றும் அதனைக் கூறுவர். கொன்றை மாலை சூடும் ஈசன் கொன்றையஞ் சோலையைக் கோயிலாகக் கொண்டார் போலும். ஆற்றங் கரையில் அழகுற அமர்ந்த திருஞாழற் கோயிலுடையார்க்கு அர்த்தயாமக் கட்டளைக்காக உத்தம சோழனுடைய முதற்பெருந் தேவியார் அளித்த நிவந்தம் சாசனத்திற் காணப்படுகின்றது.7

கொகுடிக்கோயில்

முல்லைக் கொடிகள் தழைத்துப் படர்ந்து மணங் கமழ்ந்த சூழலிற் கோவில் கொண்டார் சிவபெருமான். அது கொகுடிக் கோயில் என்று பெயர் பெற்றது கருப்பறியலூர் என்ற பழம் பதியிற் பொருந்திய அக்கோயில் தேவாரத்தில் இனிது எழுதிக் காட்டப்படுகின்றது.

“கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர்க்
கொடியேறி வண்டினமும் தண்தேனும்
பண்செய்யும் கொகுடிக் கோயில்”

என்னும் சுந்தரர் திருப்பாட்டில் முல்லைக் கோயிலின் கோலம் மிளிர்வதாகும். இத்திருக் கோயிலில் அமர்ந்த ஈசனைப் பிழையெல்லாம் பொறுத்தருளும் பெருமானாகக் கண்டு போற்றினார் திருஞான சம்பந்தர்.

“குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறிய லுரே”

என்றெழுந்த அவர் திருவாக்குக் கேற்ப அங்குள்ள இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர் என்றே இன்றும் வழங்கி வருகின்றது.